நடிகர் விஜய்க்கு எதிரான போராட்டம் தேவையற்றது- இயக்குனர் பேரரசு

0
71

நடிகர் விஜய்க்கு எதிரான போராட்டம் தேவையற்றது என்று சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பேரரசு

விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, அஜித் நடித்த திருப்பதி உள்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் பேரரசு. இவர் மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜ.க.வில் சேர்ந்தார்.

தேசப்பணி

பா.ஜ.க.வில் இணைந்தது ஏன்? என்பது குறித்து அவர் கூறும்போது, பிரதமர் மோடியின் தேசப்பணி என்னை வியக்க வைக்கிறது. அதனால் பா.ஜ.க.வில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று என் விருப்பத்தை தெரிவித்தேன். அதன் அடிப்படையில் அந்த கட்சியில் என்னை இணைத்துள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

வருமான வரித்துறை

இந்நிலையில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை, திடீரென ரெய்டு நடத்தியது. படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு, நீலாங்கரையில் உள்ள வீடு, பனையூர் வீடு ஆகியவற்றில் சோதனை நடந்தது.

பரபரப்பு

சோதனை முடிந்து நடிகர் விஜய் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது அங்கு வந்த பா.ஜ.கவினர், நடிகர் விஜய்யின் படப்பிடிப்பை அங்கு நடத்தக் கூடாது என்று போராடத்தில் ஈடுபட்டனர். அங்கு விஜய் ரசிகர்களும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜ.க.வில் சேர்ந்த இயக்குனர் பேரரசு, டுவிட்டரில் இந்தப் போராட்டம் தேவையற்றது என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி டுவிட்டரில் அவர் கூறியதாவது:-

போராட்டம் தேவையற்றது

நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பில் பா.ஜ.கவினர் போராட்டம் தேவையற்றது! விஜய் நடிகர், அரசியல்வாதி அல்ல!

இந்தமாதிரி செயல்பாடுகள் பா.ஜ.கவின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும்! அவருடைய கோடானுகோடி ரசிகர்களுக்கு மனவேதனயை தரும். நாட்டில் போராட வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கு!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சொந்த கட்சியை சேர்ந்தவரே இதுபோல கருத்து தெரிவித்து இருப்பது பா.ஜ.க கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply